Sunday, May 10, 2009

கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை

பிரிவுகள்
************

தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை:


பிரிவுகள்

நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்

மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும்.

ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது நாள் வரை நீர் வராமல் இருந்தபோது, அதே குளம் எதெதற்கெல்லாம் பயன்பட்டதோ, அவையெல்லாம் இனி நடைபெற முடியாமல் போய்விடுமே என்ற வருத்தம் அவருக்குத் தென்படுகிறது. என்ன சொல்கிறார் பாருங்கள் : வண்டித் தடங்களை இனி காண முடியாது, புல் மேய்ந்த ஆடு இனி வெறுமையைச் சந்திக்கும், மேலே பறக்கும் கழுகின் நிழலைப் பார்க்க முடியாது. இது ஒரு வகை வலிந்து உருவாக்கப்படும் முரண் அணி.

உண்மையில் கவிக்கு அந்தக் குளத்தில் நீர் வருவதில் மகிழ்ச்சி இல்லையா? அதெப்படி இல்லாமல் இருக்கும். நிச்சயம் உண்டுதான். அதுதான் வளர்ச்சி தரப்போவது. அதனால்தான், கவிதையின் முதலிலும் கடைசியிலும் குளத்தில் நீர் வரப்போவதை அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், இன்றுவரை, அதே குளத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கும் பிறர் அதனால் பாதிக்கப்படுவார்களே என்பது ஒரு சின்ன கரிசனம்.

இதை வேறு மாதிரியாகவும் வாசிக்கலாம். அதுநாள் வரை மழையே இல்லாமல், நீர் வரத்தே இல்லாமல் பல ஆண்டுகளாக, இப்படிப்பட்ட வண்டித்தடம் உருவாதல், ஆடு புல் மேய்தல், கழுகின் நிழல் படிதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டுவிட்டன. அதுவே இயல்பு என்று நினைக்கும் அளவுக்கு, நீர் பஞ்சம் அங்கே இருந்திருக்கவேண்டும். சட்டென, நாளை இக்குளத்தில் நீர் வருமானால், அதுவரை இருந்த இயல்பு பாதிக்கப்படுமே என்ற கரிசனத்தைக் இக்கவிதை சொல்வதாகவும் கொள்ளலாம். நீர் பெருகி பல ஆண்டுகள் ஆயிற்று என்பதற்கு கவி தரும் ஒரு முக்கிய ஆதாரம், வண்டித்தடம் உருவாதல். அவ்வளவு சீக்கிரத்தில் வண்டித்தடம் உருவாகிட முடியாது. பல ஆண்டுகள் பயன்பாட்டிலேயே வண்டித்தடம் உருவாக முடியும்.

இக்கவிதையை நீர் வரத்தின் மகிழ்ச்சியாகவும், இருப்பவைகள் இழக்கப் போகும் இயல்பைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதை இப்படி பல அடுக்கு அர்த்ததைத் தன்னுள் கொண்டிருப்பது அபூர்வமானது. இக்கவிதை அப்படிப்பட்ட ஒரு அபூர்வம்.

1 comment:

தமிழ் said...

எப்போதோ படித்த கவிதை
மீண்டும் நினைவுப்படுத்தமைக்கு நன்றிங்க‌

விரிவான விளக்கத்துடன் கவிதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க‌

அன்புடன்
திகழ்

பூவந்தி தங்களை அன்புடன் வரவேற்கிறது

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

AddThis

Bookmark and Share